Tuesday, August 28, 2007

யுத்த நிறுத்தத்திற்கு முன் யாழ்பாணமும் ராணுவமும்...

(நான் அடுத்ததாக சாவகச்சேரியில் கண்ட மற்றும் எற்பட்ட அனுபவங்களை எழுதுவதாக இருந்தேன். ஆனால் நண்பர் செ.குணரத்தினம் யாழ் மக்கள் யுத்தநிறுத்தம் வரை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஒரளவு நிம்மதியாக இருந்ததாக சொன்னார். இதுதான் அவர் குறிப்பிட்ட நேரத்தில் நான் பார்த்த யாழ்பாணம்.)

யாழ் பாதை திறந்த இரண்டொரு மாதத்தில் அனேக மக்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பிவிட்டார்கள். பாடசாலை தொடங்க ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வருடம் மிகவும் முக்கியமான வருடம், ஏன் என்றால் இலங்கையில் 5ஆம் வகுப்பில் ஸ்காலர்ஷப் ரெஸ்ற் நடப்பது வழக்கம். ஆனால் இடம்பெயர்வால் 95ஆம் ஆண்டு நடக்கவேண்டிய பரீட்சை நடக்கவில்லை அதனால் 96ஆம் ஆண்டு இரண்டு பரீட்சைகளையும் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்த ஸ்காலர்ஷப் பரீட்சை வந்து எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த கண்டத்தை கடந்தால் அடுத்து 10ஆம் வகுப்பில் வரும் ஓ.ல் பரீட்சைதான். கிட்டத்தட்ட ஆறு மாதம் படிப்பில்லாமல் இருந்த நாங்கள் இரண்டு மாதத்தில் பரீட்சைக்கு தயாரகவேண்டும். அந்த நேரத்தில் அடிக்கடி சுற்றிவளைப்பு நடக்கும். அப்படி நடந்தால் அந்த நாள் முழுக்க வீணாகிவிடும்.

சுற்றி வளைப்பு நேரத்தில் கொஞ்சம் வயது வந்தவர்கள் வீட்டுக்குவெளியே வரமாட்டார்கள். வயது குறைந்த எங்களை பிடித்தால் ஐடியை பார்த்துவிட்டு திருப்பி அனுப்புவான் அதனால் பெற்றோர்கள் எங்களை கொஞ்சம் பயமில்லாமல் அனுப்புவார்கள். இதுவும் ஆண்பிள்ளைகளை மட்டுந்தான். சுற்றி வளைப்பு நேரத்தில் 5 வயது பெண்பிள்ளையை கூட வீட்டு வாசல் படியை தாண்ட விடமாட்டார்கள். சுற்றி வளைப்பின்போது வயது கூடியவர்களை கூட்டிக்கொண்டுபோய் தலையாட்டிக்கு காட்டிவிட்டு அனுப்பிவிடுவார்கள் ஆனால் சில நேரத்தில் சும்மா சிலபேரை நிற்பாட்டிவைத்து அடித்துவிட்டு அனுப்புவான். அடிவாங்கிய ஓருவருக்கும் இயக்கத்துடன் தொடர்பு இருந்திருக்காது. காலப்போக்கில் இதுவெல்லாம் அன்றாடப் பழக்கமாகிவுட்டது.

இதே காலப்பகுதியில் யாழ் நகரத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. யாழ் நகரத்துக்குள் வரும் எவரும் செக் பொயின்ற் தாண்டித்தான் போகவேண்டும். எனக்கு பழக்கமானது தட்டாதெரு செக் பொயின்ற் (யாழ் நகரம் செல்லும்போது) மற்றும் கலப்பிட்டி செக் பொயின்ற் (வீடு வரும்போது). இது இரண்டு செக் பொயின்ற்களும் ஓன்வே செக் பொயின்ற்கள். இதில் நாங்கள் பட்ட கஸ்ரம் கொஞ்ச நஞ்சமில்லை. செக் பொயின்ரிலிருந்து 200 மீற்றர் தொலைவிலிருந்தே சைக்கிளிலிருந்து இறங்கி நடக்கவேண்டும், சின்னக்குழந்தையிலிருந்து நடக்கமுடியாமலிருக்கும் வயது போனவர்கள்வரை, வருத்தக்காரர்களுக்கும் இதே கதிதான். நடக்கும் சிறிய பாதையோ முள்ளுக்கம்பிகளால் கட்டப்பட்டிருக்கும். எங்களது மண்ணிலேயே எங்களை ஏதோ குற்றமிளைத்தவர்கள்போல் நடத்தினார்கள். செக் பொயின்ரில் வைத்து இரண்டு ஐ.டிகளையும் பார்த்து பாடசாலை பையை பார்த்துத்தான் அனுப்புவான். இவர்களின் நினைப்பு என்னவோ புலிகள் செக் பொயின்ற்களால்தான் யாழ் நகரத்துக்கு செல்கிறார்கள் என்பது. கிட்டத்தட்ட 11 வயதுக்குமேற்பட்ட அனைவருக்குமே 2 ஐ.டிக்கள் இருந்தன. பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை மற்றும் வடக்கில் வசிப்பதற்கான ஐ.டிக்கள். மற்றவர்களுக்கு தேசிய வடக்கில் வசிப்பதற்கான ஐ.டிக்கள். யாரும் வெளியில் செல்லும்போது வீட்டிலுள்ளவர்கள் மறக்காமல் சொல்லுவது ' ஐ.டிக்களை மறக்கால் எடுத்துக்கொண்டுபோங்கோ'. இரண்டு வீடுதள்ளி விளையாடப்போகும்போது கூட ஐ.டிக்களை எடுத்துச் சென்றிருக்கின்றோம்.

6 மணிக்குள் ஊரே அடங்கிவிடும் 6 மணிக்குப்பின் வெளியே சென்றால் அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதமில்லை. இப்படித்தான் யுத்த நிறுத்தத்தின் முன்னர் அங்கு மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. புலிகள் ஓரு போதும் புலிகள் யாழ்குடாவை விட்டுச் செல்லவில்லை. இது தெரியாமல் ஏதோ யுத்த நிறுத்தத்தின் பின்னர்தான் புலிகள் யாழ்குடாவுக்கு வாந்ததாகவும் அதனால்தான் ராணுவம் மக்களை கொல்வதாகவும் யாரும் நினைத்தால் அது உங்களின் அறியாமையைதான் காட்டுகிறது.


நன்றி
ஆறு

Labels:

Sunday, August 26, 2007

அன்றுதான் யாழ்மக்களும் இடம்பெயர்ந்தார்கள் II

(இது நான் சிறுவனாக (10 வயது) இருக்கும்போது நடந்தது. இது எனக்கு ஏற்பட்ட அனுபவமும் நான் பார்த்த சம்பவங்களுமே)


ஆமி வாறான் ஓடுங்கோ என்று அறிவத்தவுடன் மக்கள் எல்லோரும் பெட்டிகளுடன் றோட்டுக்கு வந்து விட்டார்கள். கே.கே.ஸ் றோட்டுமுழுக்க சனம் சின்ன டோச் லைட்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். எனது சின்ன சைக்கிளில் எமது சூட்கேஸ்களுடன் எனது குடும்பத்துடன் கே.கே.ஸ் றோட்டுக்கு வந்தோம். என்கோ அப்போது வயது 10, எங்கே போவது என்று தெரியாது, சாவகச்சேரிதான் போகவேண்டும் தெரியும் ஆனால் போகத்தெரியாது, பயத்தினால் அழுகைதான் வந்தது. நான் தடுமாறுவதை பார்த்த அம்மா ' தம்பி முன்னால பெரியப்பா சைக்கிள உருட்டிக்கொன்று போறார், அவருக்கு பின்னால போங்கோ, நான் பின்னலா தங்கச்சிகளுடனும் பெரியம்மாவுடனும் வாறன்'. இதைக்கேட்ட பின்புதான் பக் பக் என்று அடித்துக்கொண்டிருந்த எனது இதயத்தின் வேகம் கொஞ்சம் குறைந்தது.

கொஞ்சநேரத்தில் கண் இருட்டுக்கு பழகிவட்டதால் முன்னால் போய்கொண்டிருந்த பெரியப்பாவை என்னால் பார்க்க முடிந்தது. நல்லூர்வரை உற்சாகமாய் சைக்கிளை உருட்டிக்கொண்டிருந்த என்னை பெரியப்பா பிடித்து நிறுத்தினார், காரணம் தெரியாமல் யோசித்த நான் வானத்தை பார்த்ததும் புரிந்து கொண்டேன். வழமைபோல் நட்சத்திரங்களுடன் இல்லாமல் வானம் கரும்கறுப்பாய் காட்சியளித்தது. பெரியப்பா நல்லூரடியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிலிருந்து இரவை கழித்துவிட்டு நாளை சொல்லலாம் என்றதால் அங்கு சென்றோம். நாம் அங்கு செல்லவும் மழை கொட்டத்தொடங்கவும் சரியாகவும் இருந்தது. அன்றுதான் பூமித்தாயும் தனது கோபத்தை காட்டினாள்.

சிறிது நேரத்தில் ஆமி அடித்த சில ஷல்கள் பக்கத்தில் விழுவதுபோல் கேட்டன. அந்த சத்தத்தின் மத்தியிலும் கண்களை முடிய நான் யாரோ கூப்பிடும் சத்தத்தை கேட்டு கண் திறந்து பார்த்தால் பொழுது விடிந்திருந்தது. திரும்பி வீடு செல்வதாக ஏற்கனவே பெரியவர்கள் முடிவு செய்து விட்டதால் வீடு திரும்பினோம். இரண்டு நாட்களுக்குப்பின்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு சாவகச்சேரிக்கு தப்பி சென்றோம்.

முற்றும்
ஆறு

Labels:

Wednesday, August 22, 2007

அன்றுதான் யாழ்மக்களும் இடம்பெயர்ந்தார்கள்

அன்றும் வழமைபோல் தூரத்தில் கேட்கும் ஷெல் சத்தத்துடன் எழும்பினேன். கடந்த சில காலமாக இது எங்களுக்கு பழகிவிட்டதொன்று , தூரத்த ஷெல் சத்தம் கேட்கும் ஆனால் நாங்கள் இதை பற்றி கவலைபடுவதில்லை. அன்றும் வழமைபோல் அம்மா "தம்பி நேரம் போகமுன்னம் குளிச்சிட்டு வெளிக்கிடப்பு ஸ்கூலுக்கு நேரம் போகப்போகுது." இப்படித்தான் தினம் அம்மா கத்துவா ஆனால் நான் வழமைபோல் ஆறுதலாகதான் கதிரைவிட்டு எழும்பி குளித்துவிட்டு பள்ளிகூடம் செனறேன்.

வழமைபோல் பள்ளிகூடம் நிரம்பி இருக்கவில்லை, ஏன் என்றால் சிலர் யாழ்பாண்ம் ஆமி்டடை பிடிபட்டுபோகும் என்று ஏற்கனவே இடம்பெயர்ந்து விட்டார்கள். ஆகையால் குறைந்த மாணவர்களுடன் பள்ளிகூடங்கள் திறந்திருக்காமல் மதியம் போல் எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். நானும் வழமைபோல் உடனடியாக வராமல் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீடு வந்ததால் கோபத்தில் நின்ற அம்மாவிடமி்ருந்து அடியும் விழந்தது. இதுஎல்லாம் எனககு பழகிவிட்டதொன்று. ஆனால் அன்று இரவு எனக்குமட்டுமல்ல யாழ் மக்களுகே ஒர் புதிய இரவு.

மாலை 7மணியளவில் லாவுட் ஸ்பிகரில் "யாழ் மக்களுக்கோர் அறிவித்தல், ஆமி் கிட்ட வந்திட்டான், தப்பி ஒடவும்". இது கேட்ட 5நிமி்டத்தில் KKஸ் றோட் மக்களால் நிரம்பிவழிந்தது. நாங்களும் சாப்பிட்டதை அப்படி விட்டு விட்டு சுட்கேஸ்ஸில் உடுப்புகளை எடுத்துக்ககொன்று மாமா மற்றும் பெரியாப்பா குடும்பத்துடன் KKஸ் றோட்ல் இறங்கினம். எல்லோரும் சைக்கிளை உருட்டியபடி நடந்து போய்க்கொண்டிருந்தர்கள்.


தொடரும்....

(மன்னிக்கவும் இதுதான் முதல் தடவையாக எழுதுகிறன், அதனால் என்னால் இதை உடனடியக முடியவில்லை. தமி்ழில் எழுதுவதற்கு ஏதாவது இலகு வழி இருந்தால் தெரிவிக்கவும்.)

நன்றி
ஆறு

Labels:

வணக்கம்

வணக்கம்

இதுதான் முதல் தடவை எழுதுகின்றன், ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள். நான் திருந்த/திருத்த முயல்கிறன்.

நான் சில காலமாக தமி்ழ்மணம் படித்து வருகிறன். ஈழத்தில் பிறந்து புலத்தில் வாழ்ந்து வருபவர்கலில் நானும் ஒருவன். இன்று வலை உலகத்தில் பலர் ஈழத்தை பற்றி கதைத்துக்கொன்று இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில்தர வெற்றி அண்ணாவும் இருக்கின்றார். நான் கானா பிரபா அண்ணா எழுதுவதுபோல எனது சொந்த அனுபவத்தை எழுதுவதாக இருக்கிறன்.

நன்றி
ஆறு

Vanakamm

Hi all,

I have been reading at Thamizmanam for sometime. I enjoyed reading lots of the post so now i'm thinking of adding some of my thoughts.